ARU. Ramanathan Biography
அரு.ராமநாதன் 1924ஆம் ஆண்டு ஜூலை 7ஆம் தேதி சிவகங்கை மாவட்டத்திலுள்ள கண்டனூரில் பிறந்தார். தந்தை பெயர் வயி. ராம. அருணாச்சலம். தாயார் பெயர் அரு. வள்ளியம்மை ஆச்சி. திருச்சி தேசிய உயர்நிலைப் பள்ளியில் 1934 முதல் 1940 வரை பயின்றார். அப்பொழுதே கதைகள் எழுதுவதில் அவருக்கு ஆர்வம் இருந்தது. அவர் எழுதிய நாடகங்களும் பள்ளி விழாக்களில் இடம்பெற்றன. அதன் பிறகு சென்னை பச்சையப்பன் கல்லூரியில் இண்டர் மீடியட் படித்தார். இளங்கலை முதல் வருடத்துடன் அவரது படிப்பு முடிந்துவிட்டது.
திருமணம் ஆகாத, 17 வயது மாணவ பருவத்தில் அவரது நண்பரின் திருமண நாளன்று 6.5.1942-ல் திருமண அன்பளிப்பாக தான் எழுதிய "சம்சார சாகரம்" என்ற சிறு புத்தகத்தை வினியோகித்தார். அதைப் படிக்கும் எவரும், இதை எழுதியவர் ஆன்மீகத்தில் மிகுந்த ஆர்வம் கொண்ட வராகவும், இல்வாழ்க்கையில் பழுத்த அனுபவம் பெற்றவராகவும்தான் இருப்பார் என்று எதிர்பார்க்கத் தோன்றும். வாழ்க்கையின் இலட்சியத்தையும் இல்வாழ்க்கையின் தத்துவத்தையும் இவ்வாறு எடுத்துரைப்பவர், இல்வாழ்க்கையில் நிறைவாழ்வு வாழ்ந்து வாழ்க்கையின் பல்வேறு கால கட்டங்களிலும், பலவிதமான அனுபவங்களையும் எதிர் கொண்டிருப்பார் என்றே நினைப்பார்கள்.
'சம்சார சாகரத்திற்கு' முகவுரை எழுதிய திருச்சி, அர்ச் சூசையப்பர் கல்லூரி தமிழாசிரியர் வித்வான் திரு. ஐயன் பெருமாள் கோனார் தமது உரையில் "ஆராய்ச்சி வன்மை யும், காவியப் பயிற்சியும், அருட்கவி வளமும், பல்கலைத் திறமும், தாய்மொழிப் பற்றும், உலகியல் அறிவும் ஒருங்கே அமையப் பெற்றவர்" என்று பாராட்டு கின்றார்.
தமது கல்லூரி நாட்களைப் பற்றி 1972 ஜூன் மாதக் 'காதல்' தொடர்கட்டுரையில் கீழ்க்கண்டவாறு குறிப்பிடுகிறார். "கல்லூரியில் படிக்கும் காலத்தில்.... நான் சரிவரப் படிக்கவில்லை ... எனக்குரிய சரித்திரம், ஆங்கிலம் முதலான மற்ற பாடங்களைக் கூட நான் சரிவரப் படிக்கவில்லை . காரணம் கல்லூரியில் சேர்ந்த புதிதில் சினிமா முதலான பலவிதக் கவர்ச்சிகளினால் இழுக்கப்பட்டு கடைசி நேரத்தில் எல்லாவற்றையும் படித்துப் பரிட்சையில் தேறிவிடலாம் என்று என் அறிவின் மேல் கொண்ட மமதைதான். ஆனால் கடைசி நேரத்தில் அவ்வளவையும் படித்தும் கூட என்னுடைய அறிவால் அவ்வளவையும் ஜீரணித்துக் கொள்ள முடியவில்லை . கல்லூரியில் மூன்று பிரிவு பாடங்களிலும் முற்றிலும் தோல்வியடைந்தேன். அந்தக் காலத்தில் எனக்குத் தமிழ் உணர்ச்சி மிகவும் அதிகமாக இருந்ததால், தமிழ்ப்பாடத்திலும் நான் தோல்வியடைந்தது மிகவும் மனதை உறுத்தியது. எனவே மற்ற பிரிவுப் பாடங்கள் மட்டுமின்றி தமிழ்ப்பாடப்புத்தகங்களில் முக்கியமாக முதல் ராஜ ராஜ சோழர் புத்தகத்தைக் கருத்தூன்றிப் படித்தேன். அதன் விளைவாக செப்டம்பர் பரிட்சையில் மூன்று பிரிவுகளிலுமே முற்றிலும் வெற்றி பெற்றேன். படிப்பை நிறுத்திய பிறகு ஏதாவது தொழில் செய்ய வேண்டும் என்ற முயற்சிக்கு அவரது பாட்டனார் உதவ முன்வந்தார். “கொஞ்ச நாள் வேலை செய். அதற்குப் பிறகு தொழில் பண்ணலாம்'' என்று அவர் சொன்னதற்கு இணங்க கொஞ்சநாள் இன்சூரன்ஸ் கம்பெனி ஒன்றில் வேலைபார்த்தார். ஆனால் வேலை பிடிக்க வில்லை. எனவே சொந்தமாக ஒரு பிரஸ் ஆரம்பிக்கலாம் என்ற அடிப்படையில் திருச்சியில் உள்ள "ரெயின்போ பிரிண்டர்ஸ்" என்ற நிறுவனத்தில் பங்குதாரராகச் சேர முடிவு செய்தார். அப்பொழுது இரண்டாவது உலக மகா யுத்த சமயம். காகிதத்திற்கும் கருவிகளுக்கும் மிகுந்த தட்டுப்பாடு. ஒரு பத்திரிகை நடத்தினால்தான் இவையெல்லாம் கிடைக்கும். எனவே ஒரு பத்திரிகை ஆரம்பித்தார். அப்படி ஆரம்பிக்கப்பட்ட பத்திரிகைதான் 'காதல்'.
இதற்கிடையில் 1944-ல் டிசம்பரில் டி.கே.எஸ். நாடகக் குழுவினர் புதிய நாடகங்கள் புனைய எழுத்தாளர்களைத் தூண்டும் வகையில் ஒரு பரிசுத் திட்டம் வைத்தார்கள். ராமநாதனின் நண்பர்கள் அவரை இந்தப் போட்டியில் கலந்து கொள்ளத் தூண்டினார்கள். அவரும் ஒரு நாடகம் எழுதி அனுப்பினார். 5.6.1945-ல் நாடகப் போட்டி முடிவு அறிவிக்கப்பட்டது. இரண்டு நாடகங்கள் தேர்ந்தெடுக்கப் பட்டன. அவற்றில் ஒன்றுதான் ராமநாதன் எழுதி அனுப்பிய "இராஜராஜ சோழன்'' நாடகம்.
1945-ல் பரிசு பெற்ற இராஜராஜ சோழன் நாடகம் 10 ஆண்டுகளுக்குப் பிறகுதான் 1955 ஜூலை முதல் தேதி திருநெல்வேலியில் அரங்கேற்றப்பட்டது.
திருச்சியில் நவம்பர் 1947-ல் 'காதல்' பத்திரிகையின் முதல் இதழ் வெளியிடப்பட்டது. 'கலைமணி' என்ற சினிமா பத்திரிகை 1949 ஏப்ரலில் வெளியிடப்பட்டது. ரெயின்போ அச்சகத்தாருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளினால் இவை சென்னைக்குக் கொண்டுவரப்பட்டது. ஐந்தாண்டுகளுக்குப் பிறகு ‘மர்மக்கதை' என்ற பத்திரிகையும் துவக்கப் பட்டது. மர்மக் கதை துவக்கிய பின் அதற்கு இருக்கின்ற வரவேற்பைக் கண்டு மர்மக் கதைகளைப் புத்தகமாக வெளியிடுவதற்காக ‘பிரேமா பிரசுரம்' 1952-ல் துவக்கப் பட்டது.
'கலைமணி' துவங்கிய சில ஆண்டுகளில் நின்று விட்டது. மர்மக் கதையும் அப்படித்தான். ஆனால் 'காதல்' திரு. ராமநாதன் 1974 அக்டோபரில் காலமான பிறகும் தொடர்ந்து வெளிவந்தது. 1980-ல் நின்றுவிட்டது. பிரேமா பிரசுரம் இன்றும் திரு. ராமநாதன் சந்ததியினரால் நடத்தப் பட்டு வருகிறது. ஏறக்குறைய 430 நூல்கள் பிரசுரத்தால் வெளியிடப்பட்டுள்ளன.
திரு. அரு. ராமநாதன் திரைப்படத் தொழிலிலும் வசன கர்த்தாவாக ஈடுபட்டுள்ளார். 'தங்கப்பதுமை', 'பூலோக ரம்பை', 'ஆரவல்லி' போன்ற படங்களுக்கு திரைக்கதை வசனம் எழுதியுள்ளார். அவருக்குப் பெரும் புகழ் ஈட்டியது இராஜராஜ சோழன் நாடகம்.
1967 ஆம் ஆண்டு ஏப்ரலில் அன்றைய தமிழக முதலமைச்சர் அறிஞர் அண்ணா அவர்களால் சிறந்த நாடக ஆசிரியருக்கான விருதும் அவருக்கு வழங்கப்பட்டது.
ராமநாதன் தமது ஐம்பதாவது வயதிலேயே இயற்கை எய்தினார். அவரது படைப்புக்களிலேயே மிகவும் புகழ் பெற்றது ‘இராஜராஜ சோழன்' நாடகமும், ‘வீரபாண்டியன் மனைவி' என்ற சரித்திர நாவலும் ஆகும். அவர் எழுதிய முக்கிய சமூக நாவல் கல்கியில் தொடராக வந்த ‘குண்டு மல்லிகை' ஆகும். ஏராளமான சிறுகதைகளும், காதல் பத்திரிகையில் எழுதியுள்ளார். தமது இயற்பெயரில் மட்டும் இல்லாமல் ‘கு.ந. ராமையா', 'ரதிப்பிரியா' என்ற புனைப் பெயரிலும் ‘காதல்' பத்திரிகையில் எழுதியுள்ளார்.
எழுத்தாளர்களில் வெகு சிலரே தான் எழுதியதை, தனது பத்திரிகையிலேயே வெளியிட்டு தனது பிரசுராலயம் மூலமே பதிப்பித்தும் இருக்கின்றார்கள். இந்த மூன்று பணிகளையும் ஒருங்கே செய்து எழுத்தாளராக, இதழ் ஆசிரியராக, பதிப்பாளராக திகழ்ந்தார்.